போலீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவச பயிற்சி வகுப்புகள்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு அறிவிப்பு வெளிவர உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு கல்வித்தகுதி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்விற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்யலாம்
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இலவசமாக நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3, ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் மன்னார்குடி சாலை விளமல் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.