"கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடு விழா" - திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் இன்று உண்ணாவிரதம்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தக்கோரி அதிமுக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
சென்னை,
"கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடு விழா" - திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க, அதிமுக அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுக அரசுக்கு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதிமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை திமுக அரசு தற்போது கைவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்ற எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டத்திற்கு, மூடு விழா நடத்த முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்து, திண்டிவனத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.