15 நாட்களுக்கு மூடப்படுகிறது; வெண்டிபாளையம் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி தொடக்கம் - வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணிகளுக்காக வெண்டிபாளையம் ரெயில்வே கேட் 15 நாட்களுக்கு மூடப்படுகிறது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
பராமரிப்பு பணிகளுக்காக வெண்டிபாளையம் ரெயில்வே கேட் 15 நாட்களுக்கு மூடப்படுகிறது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
வெண்டிபாளையம் ரெயில்வே கேட்
ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை செல்லும் ரெயில்கள் வெண்டிபாளையம் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும். மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் சரக்கு வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த வழியாகத்தான் வெண்டிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு தினமும் சென்று வருகின்றன. இதுதவிர வெண்டிபாளையம், கோணவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் மாநகர் பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும். எனவே இந்த பகுதி முக்கியமான போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது
இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் ஜல்லி கொட்டுதல், சிக்னல் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு வசதியாக வெண்டிபாளையம் ரெயில்வே கேட் நேற்றுமுன்தினம் முதல் வருகிற 29-ந்தேதி வரை 15 நாட்களுக்கு மூடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி நேற்றுமுன்தினம் வெண்டிபாளையம் ரெயில்வே கேட் மூடப்பட்டு நேற்று பணிகள் தொடங்கியது. இதனால் வெண்டிபாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மோளகவுண்டன்பாளையம், சோலார், நீல்கிரீஸ் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இது தொடர்பான நோட்டீஸ் அந்த பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.