தமிழகத்தில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
‘தமிழகத்தில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும்’ என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி பேசினார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று தனது 54-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தனர்.
டாக்டர் அன்புமணி ராமதாசின் பிறந்தநாளையொட்டி, பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று காலை சென்னை ஓட்டம் என்ற பெயரில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரசார ஓட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா தலைமை தாங்கினார். இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர் உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சித்தார்த், டைரக்டர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
எங்களுடைய நோக்கம் தமிழக அரசு, காலநிலை மாற்றங்கள் சம்பந்தமான பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். உடனடியாக காலநிலை அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும். சென்னை மட்டுமல்ல தமிழகம், இந்தியா, உலக அளவில் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இயற்கை சீற்றங்கள், வெப்பநிலை மாற்றம், நூறு ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டு என்று ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வறட்சியாகவும், ஒரு பக்கம் மழை வெள்ளத்தாலும் சூழப்பட்டுள்ளது. எனவே, காலநிலை மாற்றம் குறித்தான நடவடிக்கையை தமிழகத்தில் எடுக்க வேண்டும். காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரின் மத்தியில் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
பஸ், ரெயிலை பயன்படுத்தலாம்
இன்னும் 8 ஆண்டுகளுக்குள் காலநிலை மாற்றம் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலகத்தை காப்பாற்ற முடியாது என்று ஐ.நா. சபை எச்சரிக்கை எடுத்துள்ளது. எனவே, காலநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் தான், இயற்கையின் அடுத்தகட்ட தாக்குதலை நாம் கட்டுப்படுத்த முடியும்.
இதற்கான திட்டங்களை பசுமை தாயகம் சார்பில் முன் வைத்திருக்கின்றோம். அதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிறைய மரங்கள் நட வேண்டும். நாம் இருசக்கர வாகனம், கார்களில் அதிகம் பயணம் செய்து வருகிறோம். ஆனால் அதற்கு மாற்றாக பொது போக்குவரத்தாக உள்ள பஸ், ரெயில் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்து, தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் நாம் மக்களை காப்பாற்ற முடியும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகத்தையே காப்பாற்ற முடியும்.
ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்திற்காக நிதியை சுத்தமாக ஒதுக்கவில்லை. நீர் மேலாண்மைக்கு மட்டும் தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வருகிற பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை. இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலநிலை மாற்றம் குறித்து திரைத்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.