பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மை பணி
திண்டுக்கல் மாநகராட்சி முழுவதும் பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மை பணி நடந்தது.
திண்டுக்கல் மாநகராட்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பு தூய்மை பணி நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள மழைநீர் சேகரிப்பு குளத்தில் நடந்தது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கி தூய்மை பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மழைநீர் சேமிப்பு குளத்தின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தனர். இதையடுத்து கோபாலசமுத்திரம் மற்றும் சிலுவத்தூர் சாலை மழைநீர் சேமிப்பு குளங்களிலும் பொதுமக்களின் பங்களிப்போடு தூய்மை பணி நடந்தது.
இதுதவிர மாநகராட்சி முழுவதும் குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் துணையோடு சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.