துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல்: 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகார்
திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகார்.
திருவேற்காடு,
திருவேற்காடு நகராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 மாதங்களாக சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்து நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு இந்த மாதம் 15-ந் தேதி ஆகியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து குப்பை அள்ளும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைத்து துப்புரவு பணியாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் அந்த பகுதி வழியாக பள்ளி செல்லும் வாகனங்களும், வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவேற்காடு நகர் மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் திருவேற்காடு போலீசார் நகராட்சி கமிஷனர் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.