தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதியில் செம்மொழி நூலகம்

தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதியில் செம்மொழி நூலகம்

Update: 2022-12-10 19:42 GMT

தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதியில் செம்மொழி நூலகத்தை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. திறந்து வைத்தார்.

தமிழக அரசு உத்தரவு

கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும், அரசு வேலைவாய்ப்பை பெறும் வகையில் பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டும், மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் நூலகங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகங்களை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் தங்கியுள்ள விடுதி கட்டிடங்களிலும் செம்மொழி நூலகங்கள் அமைக்கப்பட்டன.

நூலகம் திறப்பு

இதற்காக ரூ.1 லட்சம் செலவில் நூல்கள், தளவாடச் சாமான்கள் வாங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷாபுண்ணியமூர்த்தி, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேனுகாதேவி வரவேற்றார்.

விழாவில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கலந்துகொண்டு நூலகங்களை திறந்து வைத்து, மாணவிகளிடம் நூல்களை வாசிக்க வழங்கினார்.

இந்த விழாவில் தாசில்தார் சக்திவேல், விடுதி காப்பாளர்கள் தெய்வநாயகி, லோகநாயகி, லோகேஸ்வரி, சகாயமேரி மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்