குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலி
வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானார். மேலும் 2 பேரை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.
வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானார். மேலும் 2 பேரை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.
மாணவி
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் விஸ்வஜோதி (வயது 12). இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள முத்தாளம்மன் குளத்தில் குளிப்பதற்காக விஸ்வஜோதி தனது சகோதரி மகர ஜோதி மற்றும் தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் ஆகியோருடன் குளிக்க சென்றார்.
2 பேரை காப்பாற்றினார்
இந்த நிலையில் விஸ்வஜோதி, தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் ஆகியோர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கினர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிவேல்ராஜ் மகன் சபரீஸ்வரன் (13) என்ற சிறுவன் தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் ஆகியோரை குளத்தில் இறங்கி வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார்.
ஆனால் சிறுமி விஸ்வஜோதி தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளத்தில் மூழ்கிய விஸ்வஜோதியை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது.
பாராட்டு
இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரை உயிருடன் மீட்ட 8-ம் வகுப்பு மாணவன் சபரீஸ்வரனை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டினர்.
இது குறித்து மாணவன் சபரீஸ்வரன் கூறும் போது, விஸ்வஜோதி உள்ளிட்ட 3 பேர் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, நான் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தேன். விஸ்வ ஜோதி நீரில் மூழ்கிய நிலையில் ரவி பிரகாஷ் மற்றும் தேவதர்ஷினியை பிடித்து இழுத்து காப்பாற்றினேன் என்றார்.