மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் பலி

கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் பலியானார்.

Update: 2022-07-01 19:43 GMT

பள்ளத்தில் கவிழ்ந்தது

கறம்பக்குடி அருகே உள்ள கரும்புலி காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 12). இவர் இலைகடி விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அவரது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு சூரக்காட்டிற்கு சென்றார்.

சூரக்காடு வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கண்காணிப்பு பணியில்

கறம்பக்குடி பகுதியில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதும், கட்டுப்பாடின்றி அதிவேகமாக செல்வதும் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் 3, 4 பேர் அமர்ந்து செல்வதை தினமும் பார்க்க முடிகிறது. இதேபோல் 10, 12 வயது சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வதும், அவர்களது பெற்றோர் பின்னாலும் அமர்ந்து செல்கிறார்கள். இளம் கன்று பயமறியாது என்பதை போல் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டி செல்லும் சிறுவர்கள் இதுபோன்று விபத்துக்குள்ளாகி விலைமதிப்பற்ற தங்களது இன்னுயிரை மாய்த்து வருவது வேதனையாக உள்ளது. எனவே மோட்டார் சைக்கிள்களை சிறுவர்கள் ஓட்டி செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. இதேபோல் போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்