திருச்சி மாநகராட்சி பூங்கா கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி

நண்பர்களுடன் விளையாட சென்றபோது, திருச்சி மாநகராட்சி பூங்கா கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-01-07 19:34 GMT

நண்பர்களுடன் விளையாட சென்றபோது, திருச்சி மாநகராட்சி பூங்கா கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

5-ம் வகுப்பு மாணவன்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 43). இவரது மனைவி ஆதிலட்சுமி (40). இந்த தம்பதிக்கு சுகன், ஜெகன்நாத் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் சுகன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியல் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 2-வது மகன் ஜெகன்நாத் (10) காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

பூங்காவில் விளையாட...

நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் ஜெகன்நாத் நண்பர்களுடன் பர்மா காலனியில் பயன்பாட்டில் இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவிற்கு சென்றான். பூங்காவில் உள்ள கிணற்றில் ஜெகன்நாத் மற்றும் அவனது நண்பர்கள் மீன்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஜெகன்நாத்தின் செருப்பு கிணற்றில் விழுந்தது. இதனால் அவன் செருப்பை எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தான். இதை கண்ட மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஜெகன்நாத் கிணற்றில் மூழ்கினான். மேலும் இது சம்பந்தமாக கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின் ஜெகன்நாத்தை பிணமாக மீட்டனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெகன்நாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்