சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் மோதல்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்டத்தலைவரை மாற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாங்குநேரி வட்டார தலைவர் முத்துகிருஷ்ணன், களக்காடு வட்டார தலைவர் பிராங்ளின் பாலசிங் ஆகியோரை மாற்றக்கோரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும் நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் 5 பஸ்கள் மற்றும் வேன்களில் சுமார் 300 பேர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வந்து குவிந்தனர். அவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி நின்றனர்.
இந்த நிலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் அவரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் நெல்லை மாவட்டத்தலைவரை மாற்றினால்தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறினர். உடனே அவர் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.
அழகிரியின் கார் மறிப்பு
அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் முடிவு எட்டப்படாததால் அனைவரும் பிரதான கூட்ட அரங்கில் அமர வைக்கப்பட்டனர்.
அதன்பின்னர், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கே.எஸ்.அழகிரி வட்டார தலைவர்களை தேர்வு செய்தது தேர்தல் அதிகாரிகள் தான். இதுகுறித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார்.
கே.எஸ்.அழகிரி வெளியே வந்து காரில் ஏறி புறப்பட முற்பட்டபோது, பிரதான கூட்ட அரங்கில் இருந்த போராட்டக்காரர்கள் ஓடி வந்து காரை மறித்து முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரியின் காரை சுற்றி நின்று சத்தியமூர்த்தி பவனில் இருந்து பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.
பயங்கர மோதல்
கே.எஸ்.அழகிரியின் காரை பாதுகாப்பாக வெளியே அனுப்பிய உடன், சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்த கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் சத்திய மூர்த்தி பவனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் வந்த பஸ்களை வெளியே எடுக்குமாறு வலியுறுத்தினர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் களக்காடு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா மற்றும் டேனியல், ராபர்ட் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்தபோது சத்தியமூர்த்தி பவனே போர்க்களம் போல காட்சி அளித்தது.
ஏற்கனவே தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் உடனடியாக மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தியதால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இதன்பின்னர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.