பவளத்தானூர் இலங்கை அகதிகள் முகாமில் இரு தரப்பினர் மோதல்; 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
பவளத்தானூர் இலங்கை அகதிகள் முகாமில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கவுன்சிலர் மகன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாரமங்கலம்:
இலங்கை அகதிகள் முகாம்
தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் சஜிமான் (வயது 17), இவரும் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் சசிதரன் (17). என்பவரும் நண்பர்கள். இதனால் சசிதரன் அடிக்கடி முகாமில் வந்து நண்பருடன் தங்கி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சசிதரன் முகாமில் நண்பர் சஜிமானுடன் தங்கி உள்ளார். தனது வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் நேற்று சசிதரனின் தாயார் பூங்கொடி மற்றும் உறவினர்கள் முகாமிற்கு ெசன்று சசிதரனை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது சஜிமான் நண்பர்களுக்கும், பூங்கொடியின் உறவினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது இருதரப்பினர் இடையே மோதலாக மாறியது.
9 பேர் மீது வழக்கு
இது பற்றி சசிதரனின் உறவினரான தாரமங்கலம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் செல்வியின் மகன் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் தன்னுடைய நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களுடன் அகதிகள் முகாமுக்கு சென்றார். அங்கு சாந்தியின் மகன்கள் மற்றும் அங்கு இருந்த அவர்களது உறவினர்களை உருட்டு கட்டையால் அடித்து உதைத்தனர். மேலும் அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு. சசிதரனை உடன் அழைத்துச்சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக காட்சி அளித்தது.
இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கவுன்சிலரின் மகன் அரவிந்தன் (26), கலையரசன் (16), கார்த்தி (23), வல்லரசு (21), பிரதிப் (21), பாரதிக்கண்ணன் (20), குணா (21), சஞ்சய் (17), ராகுல் (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இலங்கை அகதிகளிடமும் விசாரணை நடத்தினர்.