சிவனடியார்-நிர்வாகிகள் இடையே மோதல்
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவிலில் சிவனடியார்-நிர்வாகிகள் இடையே மோதல் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவனடியார்கள் கூட்டம் சார்பில் 51 மாதங்களாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தேவார முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி மாலை 4 மணி வரை நடந்தது. அப்போது மதியம் 1 மணிக்கு நடை மூடுவதற்கு முன்பாக திருவாசகம் படிக்கும் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தினர், சிவனடியார்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மதிய உச்சிகால பூஜை முடிந்த பிறகும் திருவாசகம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாயூரநாதர் கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் அங்கு வந்த திருவாவடுதுறை ஆதீன மடத்தின் பணியாளர்கள் கோவில் ஆகம விதிப்படி மதியம் 1 மணிக்கு நடையை மூட வேண்டும் என்று கூறி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்திய சிவனடியார்களை கோவிலில் இருந்து வெளியேற்றினர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.கோவில் நடையை மூடுவதற்கு இடையூறு அளித்து சிவனடியார்கள் கோவில் ஊழியரை தாக்கியதாக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். கோவிலில் ஏற்பட்ட மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.