தி.மு.க.-பா.ஜ.க.வினர் இடையே மோதல்
நாகையில் பட்டாசு வெடித்ததில் தி.மு.க.-பா.ஜ.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகையில் பட்டாசு வெடித்ததில் தி.மு.க.-பா.ஜ.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நாகை டாட்டா நகரைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். இவர் நாகை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 36-வது வார்டில் விஜயேந்திரன், சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்த விஜயேந்திரனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து விஜயேந்திரன் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு டாடா நகரில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தி.மு.க.-பா.ஜ.க.வினர் மோதல்
பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தபோது பட்டாசு துகள்கள் டாடா நகரில் வசிக்கும் 36-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானமணியின் மளிகை கடை மீது விழுந்தது. இதில் கடையில் இருந்த கண்ணாடிகள் உடைந்தன.
இதுகுறித்து ஞானமணி கேட்டார். அப்போது ஞானமணிக்கும், விஜயேந்திரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
11 பேர் மீது வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதில் காயம் அடைந்த 11 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தி.மு.க. கவுன்சிலர் ஞானமணி கொடுத்த புகாரின் பேரில் விஜயேந்திரன் உள்பட 4 பேர் மீதும், விஜயேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஞானமணி உள்பட 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் தி.மு.க., பா.ஜ.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.