குறைந்த செலவில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி தேனி என்ஜினீயரிடம் ரூ.3 லட்சம் மோசடி:சத்தீஷ்கார் வாலிபர் கைது

குறைந்த செலவில் கோவாவுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி, தேனி என்ஜினீயரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-06 18:45 GMT

கோவாவுக்கு சுற்றுலா

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 29). இவர், ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தனது அலுவலக நண்பர்களுடன் கடந்த ஆண்டு இவர் கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டார். இதற்காக சுற்றுலா தொடர்பான விவரங்களை 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் தேடினார்.

அதில் குறைந்த செலவில் கோவா சுற்றுலா தொடர்பாக ஒரு அறிவிப்பை ஒருவர் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த கமலக்கண்ணன், அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

விமான டிக்கெட் கட்டணம்

அப்போது எதிரே பேசிய நபர், கோவாவுக்கு சுற்றுலா செல்வதற்கு விமான டிக்கெட் கட்டணம் உள்பட 5 இரவு, 6 பகல் தங்குவதற்கான செலவுகள் என மொத்தம் ஒரு நபருக்கு ரூ.28 ஆயிரம் ஆகும் என்று கூறினார். இதனை நம்பிய கமலக்கண்ணன், அவரும், அவருடைய நண்பர்கள் என மொத்தம் 14 பேர் சுற்றுலா செல்ல திட்டமிட்ட விவரத்தை தெரிவித்தார்.

அதற்கு விமான டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்தினர் தெரிவித்த வங்கிக் கணக்கு, 'கூகுள்-பே' செயலி போன்றவை மூலம் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 500 அனுப்பினார். அதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்ததாக தெரிவித்த நிலையில், திடீரென விமான டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டது.

இதை அறிந்த கமலக்கண்ணன், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். அப்போது அவருடைய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

சத்தீஷ்காருக்கு போலீசார் விரைவு

இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கமலக்கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி குறித்து விசாரித்த போது மோசடி செய்த நபர் சத்தீஷ்கார் மாநிலத்தில் வசிப்பது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் குமார் உத்தரவின்பேரிலும், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரிலும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, போலீஸ்காரர்கள் ஜெபராஜ், ஜெகதீசன், இந்தி பேச தெரிந்த போலீஸ்காரர் பழனிசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சத்தீஷ்கார் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பட்டதாரி கைது

சத்தீஷ்கார் மாநிலம் பிர்க்கு மாவட்டம், பிளாய்நகர் அருகில் உள்ள தயாநகர் பகுதிக்கு சென்ற தனிப்படையினர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (33) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பி.காம். பட்டப்படிப்பு படித்துவிட்டு அதே பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுத்து வந்ததாகவும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இன்ஸ்டாகிராம் மூலம் விரித்த வலையில் கமலக்கண்ணன் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தினேஷ்குமாரை தனிப்படையினர் நேற்று தேனிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதை தொடர்ந்து அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்தீஷ்கார் சென்று கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்