குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி இன்சூரன்ஸ் பாலிசி கேட்கும் மோசடி கும்பல்சென்னிமலை பகுதி பொதுமக்கள் குமுறல்

சென்னிமலை பகுதி பொதுமக்கள் குமுறல்

Update: 2023-01-24 19:30 GMT

 குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னிமலை பகுதி பொதுமக்கள் தங்களது மனக்குமுறலை வெளியிட்டுள்ளனர்.

கடன் வாங்கி தருவதாக...

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த சில மாதங்களாக செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசும் மர்ம நபர்கள், உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தேவைப்பட்டால் உடனடியாக நாங்கள் வாங்கி தருகிறோம்' என கூறுகின்றனர். உடனே பொதுமக்கள், கடன் வாங்குவதற்கு செக்யூரிட்டி ஏதாவது வேண்டுமா என கேட்கின்றனர். அதற்கு அந்த நபர்கள், செக்யூரிட்டி எதுவும் தேவையில்லை. கடன் வாங்கும் தொகையில் 10 சதவீதம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் போதும். இந்த பாலிசி தொகை கடன் தொகையை கட்டி முடிக்கும் போது உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

இதை உண்மை என்று நம்பும் பொதுமக்கள் கடன் கிடைத்தால் போதும் என்ற மிகழ்ச்சியில் கடன் வாங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.

இன்சூரன்சு பாலிசி

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த நபர்களிடம் இன்சூரன்சு பாலிசி எடுக்கின்றனர். பின்னர் பொதுமக்கள் கடன் குறித்து கேட்பதற்காக அந்த நபர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றால் அது சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அப்போது தான் பொதுமக்கள், மர்மநபர்கள் கடன் வாங்கி கொடுப்பதாக கூறி தங்களை ஏமாற்றி இன்சூரன்சு பாலிசி பிடிப்பது தெரிய வருகிறது.

இதுபோன்று கடன் கிடைப்பதாக நம்பி பாலிசி எடுத்து ஏமாந்த சென்னிமலை கிழக்கு தெருவை சேர்ந்த கோபி என்பவர் கூறியதாவது:-

எனக்கு யார் என்றே தெரியாத நபர் ஒருவர் எனக்கு போன் செய்து செக்யூரிட்டி எதுவும் இல்லாமலேயே ரூ.3 லட்சம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருகிறேன். அந்த பணத்தை மாதந்தோறும் தவணை முறையிலோ அல்லது குறிப்பிட்ட வருடத்திற்குள்ளோ செலுத்தினால் போதும் என்றார். அதற்கு நானும் சரி என்றேன். ஆனால் கடன் தொகையில் 10 சதவீதத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்றும், இந்த பாலிசி தொகை கடன் தொகையை செலுத்தி முடிக்கும் போது முழுமையாக திரும்ப கிடைத்து விடும் என்றும் தெரிவித்தார்.

ஏமாற்றம்

இதனை நான் ஏற்றுக்கொண்டதால் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை அந்த நபர் என்னை சந்திக்காமலேயே எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினார். பாலிசி தொகை ரூ.30 ஆயிரத்தை செலுத்தினால் ஒரு வாரத்திற்குள் ரூ.3 லட்சம் கடன் கிடைத்து விடும் என அந்த நபர் சொன்னதால் நானும் உடனடியாக ரூ.30 ஆயிரத்தை வங்கி கணக்கு மூலம் செலுத்தினேன். அதன்பிறகு சில நாட்களில் தபால் மூலம் பாலிசியும் எனக்கு வந்து விட்டது.

ஆனால் அந்த நபர் சொன்னபடி எனக்கு கடன் எதுவும் வரவில்லை. இதனால் அந்த நபரை நான் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்களுக்கு கடன் உறுதியாகி விட்டது. ஓரிரு நாளில் விசாரிப்பதற்காக உங்களிடம் வருவார்கள். அதன்பின்னர் உங்களுக்கு கடன் வந்து விடும் என்றார். இதை நம்பி நானும் பல நாட்கள் காத்திருந்தேன். ஆனால் கடன் தொகை கிடைக்காமல் நான் ஏமாற்றமடைந்தேன்.

கடும் நடவடிக்கை

இதனால் அந்த நபரை நான் தொடர்பு கொண்டால் செல்போனை எடுப்பதில்லை. மேலும் செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விடுகிறார். இதுபற்றி நான் பலரிடம் விசாரித்த போது தான் உண்மையை உணர்ந்தேன். அந்த நபர்கள் கடன் வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் பல பேரிடம் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றது தெரிய வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்ற மோசடிகாரர்கள் அப்பாவி மக்களின் சூழ்நிலைகளை பயன்படுத்தி நேரில் சந்திக்காமலேயே செல்போன் மூலம் பேசி ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இப்படி ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்