குறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறிவிருதுநகர் ரியல் எஸ்டேட் அதிபரிடம்ரூ.20 லட்சம் மோசடி:4 பேர் மீது வழக்கு

குறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறி விருதுநகர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-21 18:45 GMT

ரியல் எஸ்டேட் அதிபர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சிங்கராஜகோட்டை பெரியவீதியை சேர்ந்த குமாரசாமி மகன் விக்னேஷ் (வயது 33). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் 'பேஸ்-புக்'கில் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து விளம்பரம் செய்திருந்தேன். அதை பார்த்துவிட்டு சென்னையை சேர்ந்த சத்தியசீலன் என்னை தொடர்பு கொண்டார். ரியல் எஸ்டேட் தொழிலுக்கு குறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறினார். அதற்கு 2 சதவீதம் கமிஷனும், 10 சதவீதம் தள்ளுபடி கட்டணமும் தர வேண்டும் என்று கூறினார். நான் எனது தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், எனது வீட்டை அடமானம் வைத்து ரூ.17 லட்சமும், கையிருப்பில் இருந்த ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை தயார் செய்தேன். அந்த பணத்துடன் என்னை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருமாறு சத்தியசீலன் கூறினார்.

ரூ.20 லட்சம் மோசடி

அதை நம்பி கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி நான் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தேன். அப்போது திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த ராஜன் மகன் இளங்கோவன் அங்கு வந்தார். சத்தியசீலன் அனுப்பியதாக அவர் என்னிடம் கூறினார். அப்போது அவருடன் திருப்பூர் வேலாம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன், நெருபெரிச்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரமூர்த்தி ஆகிய 2 பேரும் வந்தனர். அவர்கள் இருவரும், கடன் வாங்குவதற்காக பணம் கொடுத்து அதற்கான ஆவணங்களை இளங்கோவனிடம் இருந்து வாங்கிச் செல்வதற்காக வந்ததாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கூறினர். அதை நம்பி நான் பணத்தை கொடுத்தேன்.

பணத்தை வாங்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் சென்று ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிச் சென்றார். ஆனால் 3 பேரும் திரும்பி வரவில்லை. பணத்துடன் தலைமறைவாகி விட்டனர். எனவே, என்னை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

புதுச்சேரி சிறை

அந்த புகாரின் பேரில் சத்தியசீலன், இளங்கோவன், பார்த்திபன், சுந்தர் என்ற சுந்தரமூர்த்தி ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான 4 பேர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளங்கோவன், பார்த்திபன், சுந்தர் என்ற சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் புதுச்சேரியில் மற்றொரு மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதும், அவர்கள் புதுச்சேரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சத்தியசீலன் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்