பொய் வழக்குப்பதிவு செய்வதாக கூறி விபத்தில் பலியானவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

Update: 2023-06-03 20:28 GMT

பொய் வழக்குப்பதிவு செய்வதாக கூறி விபத்தில் பலியானவரின் உடலை வாங்க மறுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து

நாமக்கல் மாவட்டம் வெப்படை மக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). தறிப்பட்டறை மேற்பார்வையாளர். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு தினேஷ்குமார் (23), மயில்ராஜ் (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மயில்ராஜ் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 31-ந் தேதி சண்முகமும், மயில்ராஜூம் மோட்டார் சைக்கிளில் அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றனர். அதன்பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் வெப்படைக்கு செல்வதற்காக ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவல்பூந்துறை பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த காரும், மயில்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சண்முகமும், மயில்ராஜூம் படுகாயம் அடைந்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற ஒரு பெண்ணும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

போராட்டம்

விபத்தில் படுகாயம் அடைந்த சண்முகம், மயில்ராஜ் ஆகியோர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். இதில் சண்முகம் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பகலில் சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொய் வழக்கு

போராட்டத்தில் ஈடுபட்ட சண்முகத்தின் உறவினர்கள் கூறுகையில், "விபத்து நடந்து முடிந்த பிறகு மயில்ராஜிடம் புகார் பெறப்பட்டு வந்தது. ஆனால் சண்முகம் இறந்த பிறகு விபத்து நடந்த இடத்தில் ஒரு பெண் காயம் அடைந்ததாக கூறி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணிடம் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்வதற்கான முயற்சி நடக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மயில்ராஜ் மீது தவறு உள்ளதாக பொய் வழக்கு போடுவதற்கான முயற்சி நடைபெறுகிறது. எனவே மயில்ராஜிடம் பெற்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே சண்முகத்தின் உடலை பெற்றுக்கொள்வோம்", என்றனர். அதற்கு போலீசார், "மயில்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்படும்", என்று உறுதி அளித்தனா். இதையடுத்து சண்முகத்தின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த சம்பவத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்