அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

குழந்தையுடன் பெண்ணை இறக்கிவிட்டதால் அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

Update: 2023-02-07 17:11 GMT

கலவை

குழந்தையுடன் பெண்ணை இறக்கிவிட்டதால் அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

பெண்ணை இறக்கி விட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வாழைப்பந்தல் ்கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், பெண் கை குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று  ஜெயப்பிரியா 2 குழந்தைகளுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார்.

பின்னர் அங்கிருந்து வாழைப்பந்தலுக்கு அரசு பஸ்சில் வந்தார்.

மேல்புதுப்பாக்கத்தில் கிராமத்தில் வந்தபோது அனைத்து பயணிகளும் இறங்கினர்.

வாழைப்பந்தல் செல்ல வேண்டிய ஜெயப்பிரியாவிடம் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் இதற்கு மேல் பஸ் போகாது, எனவே இங்கேயே இறங்கும்படி கூறியதாக தெரிகிறது. அதற்கு ஜெயப்பிரியா என்னிடம் 2 குழந்தைகள் உள்ளன.

மேலும் 4 கிலோ மீட்டருக்கு இந்த வெயிலில் குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கண்டக்டர் ஜெயப்பிரியாவை எங்கே ஏறினீர்கள் என்று கேட்டு, ஆரணி பஸ் நிலையத்தில் உங்களை இறக்கி விடுகிறேன் என்று கூறி 2 குழந்தைகளுடன் ஜெயப்பிரியாவை ஆரணி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

பஸ் சிறைபிடிப்பு

ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜெயப்பிரியா பஸ் நிலையத்தில் மயக்கம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் சிகிச்சை அளித்து தனியார் பஸ்சில் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தாமதமாக வீட்டுக்கு வந்த ஜெயப்பிரியா நடந்த சம்பவத்தை கணவரிடம், உறவினர்களிடமும் தெரிவித்தார்.

இதனால் இரவு 7 மணி அளவில் வாழைப்பந்தலுக்கு வந்த அந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்து கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 9 மணி அளவில் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

இதனால் இப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்