தாரமங்கலத்தில் சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தாரமங்கலத்தில் சாலை விரிவாக்க பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். சாக்கடை கால்வாய் அமைக்கும் வரை இந்த பணியை தொடரக்கூடாது என்று பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-11-22 20:42 GMT

தாரமங்கலம், 

சாலை விரிவாக்க பணி

ஓமலூரில் இருந்து சங்ககிரி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடக்கிறது. இந்த பணி நகர பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாரமங்கலம் நகராட்சி 27-வது வார்டு பொதுமக்கள் நேற்று காலை திடீரென தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து சாலை பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாக்கடை கால்வாய் வசதியின்றி அவதிப்பட்டு வருகிறோம். மழைகாலங்களில் நகர பகுதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரும், சாக்கடை கழிவுகளும் கலந்து குடியிருப்பு வீடுகளில் புகுந்து தேங்கி நிற்கிறது.

இதனால் இங்கு கடந்த 2 மாதங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறோம். இந்த நிலையை போக்க இந்த பகுதியில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதனிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும், நகராட்சி தலைவர் குணசேகரன், 27-வது வார்டு கவுன்சிலர் லட்சுமி ஈஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், முரளிதரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாக்கடை கால்வாய் பணிக்கு ஒப்பந்தம் பெறப்படவில்லை என்றும், தற்போது சாலை விரிவாக்க பணிக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெறுவதால் சாக்கடை கால்வாய் பணியை மேற்கொள்ள இயலாது என்றும் அதிகாரிகள் கூறினர்.

பணி நிறுத்தம்

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், சாலை விரிவாக்க பணி முடிந்து விட்டால் சாக்கடை கால்வாய் அமைக்காமல் கிடப்பில் போடப்படும் என்பதால், சாக்கடை கால்வாய் அமைக்காமல் சாலை பணியை மேற்கொள்ள விட மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து சாலைவிரிவாக்க பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து சாலை விரிவாக்கப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்