சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி அமைச்சர் சி.வி.கணேசனின் காரை வழிமறித்த பொதுமக்கள்; சிறுபாக்கத்தில் பரபரப்பு
சிறுபாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி அமைச்சர் சி.வி.கணேசனின் காரை பொதுமக்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுபாக்கம்,
அமைச்சர் கார் வழிமறிப்பு
சிறுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழைவெள்ளத்தால் தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிப்போனது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மங்களூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அடரியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சி.வி.கணேசன் சிறுபாக்கம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த அண்ணாநகர் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுபாக்கம்-அடரி சாலைக்கு திரண்டு வந்ததுடன், அவ்வழியாக வந்த அமைச்சர் சி.வி.கணேசனின் காரை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் தங்களது பகுதியில் சேதமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.கணேசனிடம் வலியுறுத்தினர்.
சாலை அமைக்க உத்தரவு
இதை கனிவுடன் கேட்ட அமைச்சர் சி.வி.கணேசன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இன்னும் ஒரு வாரத்திற்குள் அண்ணாநகர் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதுடன், வரும் 5-ந்தேதிக்குள் அதற்கான பூமி பூஜையையும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதோடு அப்பகுதி மக்களிடம் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் நான் கலந்து கொள்வேன் எனவும் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.