லாங்வுட் சோலையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கோத்தகிரி லாங்வுட் சோலையில் கட்டுமான பணிகளை நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-31 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி லாங்வுட் சோலையில் கட்டுமான பணிகளை நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாங்வுட் சோலை

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் லாங்வுட் சோலை 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில், சதுப்பு நிலங்கள் தேக்கி வைக்கும் தண்ணீர் 25 கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, பல்லுயிர்ச் சூழல் மையமாகவும் உள்ளது. அங்கு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், சோலை மர நாற்றுகள் தயாரிக்கும் நர்சரி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என தன்னார்வலர்களும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என கிராம மக்களும் கூறியதோடு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று லாங்வுட் சோலையில் நர்சரி அமைப்பதற்காக மினி பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதை அறிந்த கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் பாலகிருஷ்ணன், லாங்வுட் சோலை நீராதாரம் மூலம் பயன்பெற்று வரும் ஜக்கனாரை ஊர்தலைவர் போஜன், ஹாயட்டி தலைவர் ரவி, ஒசஹட்டி தலைவர் லட்சுமணன், ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் தலைமையில் கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் லாங்வுட் சோலையில் திரண்டனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

அவர்கள் வருவாய்த்துறையிடம் அனுமதி பெறாமல் மினி பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தியதுடன், கட்டுமான பணிகள் மேற்கொண்டால் சதுப்பு நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நீராதாரம் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும், எனவே, பணிகளை நிறுத்த வேண்டும். வனப்பகுதிக்குள் கழிப்பிடங்கள் கட்டக்கூடாது என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், வனவர்கள் விவேகானந்தன், பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, செயல் அலுவலர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் அருண் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பணிகள் நிறுத்தி வைக்கப்படும், 3 நாட்களுக்குள் மாவட்ட வன அலுவலர் தலைமையில் லாங்வுட் சோலையில் கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தடையின்றி குடிநீர்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே நர்சரி இருந்த அதே இடத்தில் மீண்டும் நர்சரி அமைய உள்ளது. சுற்றுச்சூழல் மையம் கழற்றும் வகையில் தற்காலிகமாக மரங்களால் அமைக்கப்படும். தற்போது குடிநீர் வழங்கும் கிராமங்களுக்கு தொடர்ந்து குடிநீர் வினியோகம் தடையின்றி செய்ய வசதியாக தடுப்பணை பராமரித்து புதுப்பிக்கபடும். வேறு கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்