ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் குடிமராமத்து பணி செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் குடிமராமத்து பணி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் குடிமராமத்து பணி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பி.ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் இலவச செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்த சங்கரன்கோவில் தாலுகா பரமக்குடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரூ.4500 மதிப்பிலான செயற்கை காலினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி பெண்
அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு சுரண்டை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் வந்தார். அப்போது அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நான் எம்.ஏ. பி.எட். படித்துள்ளேன். நான் ஒரு மாற்றுத்திறனாளி. எனது உறவினர் வீட்டிற்கு ஒருவர் வருவார். நிறைய பேருக்கு வேலை வாங்கி தருவதாகவும் எனக்கும் வேலை வாங்கி தருகிறேன் என்றும் கூறி பணம் கேட்டார். நான் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பல தவணைகளில் ரூ.7½ லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் இப்போது வரை அவர் வேலை வாங்கித்தரவில்லை. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவரிடம் பணம் கேட்டேன். ஆனால் தரமுடியாது என்று கூறுகிறார். இவர் பலரையும் இதுபோன்று ஏமாற்றியுள்ளார். இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்குவாரி
ஆலங்குளம் தாலுகா ஆண்டிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் விவசாயிகள் சார்பில் பருதிராஜ் என்பவர் கொடுத்துள்ள மனுவில், எங்களது ஊரில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவரும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். எங்கள் ஊருக்கு மேல்புறம் பூலாங்குளம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கல் குவாரி இயங்கி வருகிறது. மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்த குவாரி இயங்கி வருகிறது. எனவே இதன் உரிமத்தை ரத்து செய்து இதனை மூட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
குளத்தில் குடிமராமத்து பணி
பா.ஜ.க. பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் ஆலங்குளம் கந்தசாமி கொடுத்துள்ள மனுவில், ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் சீமை கருவை, நாட்டுக்கருவை மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும் தனிநபர்களால் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. குளத்தில் கரை இல்லாமல் காணப்படுகிறது. ஆக்கிரமிப்பினால் அளவும் குறைந்து காணப்படுகிறது. இங்கு கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகின்றன. எனவே இந்த குளத்தை குடிமராமத்து பணி செய்ய கேட்டுக் கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.