பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-01-18 19:00 GMT

திருவாரூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது வினியோக திட்டம்

திருவாரூர் மாவட்ட பொது வினியோக திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோக திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 21- ந்தேதி (சனிக்கிழமை) தாலுகா வாரியாக நடக்கிறது.

திருவாரூர் தாலுகா திருநெய்ப்பேர் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா சேங்கனூர் கிராமத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்இயக்குனர் தலைமையிலும், குடவாசல் தாலுகா செல்லூர் கிராமத்தில் திருவாரூர் சரக துணைபதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா ஆதிச்சமங்கலம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் நடக்கிறது.

நீடாமங்கலம்- திருத்துறைப்பூண்டி

இதே போல் நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர் கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் தலைமையிலும் மன்னார்குடி தாலுகா விக்கிரபாண்டியம் கிராமத்தில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா விளத்தூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா குலமாணிக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.

எனவே மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் செல்போன் எண் மாற்றம் போன்றவற்றுக்கு மனு அளிக்கலாம். மேலும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்