சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்-நகர சபை கூட்டத்தில் தீர்மானம்

சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

Update: 2023-04-20 18:45 GMT

சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நகர சபை கூட்டம்

சிவகங்கை நகர சபை கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நகர சபை ஆணையாளர் பாண்டீஸ்வரி, துணை தலைவர் கார் கண்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:- நகர்மன்ற உறுப்பினர் சரவணன்:- நகரில் சுமார் 3,000 மக்கள் பட்டா மாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பலர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து ஏற்கனவே பட்டா வைத்துள்ளனர். பட்டா மாற்றம் செய்ய சென்றால் அந்த இடம் அரசு இடம் என்று உள்ளதால் பட்டா மாற்றம் செய்ய மறுக்கின்றனர். வருவாய்த்துறை பதிவேடுகளில் ஏற்பட்ட தவறு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை சரி செய்ய வேண்டும்.

உறுப்பினர் பிரியங்கா:- நகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டில் உள்ள கல்லூரி சாலைக்கு கலைத்துறை, கவிதை துறையிலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கவிஞர் மீ.ராஜேந்திரனை போற்றும் வகையில் கவிஞர் மீரா சாலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு நிலை நகராட்சி

நகர சபை தலைவர் துரை ஆனந்த்:- உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று கல்லூரி சாலை கவிஞர் மீரா சாலை எனவும், ராம் நகர் விரிவாக்க பகுதியை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேதாஜி நகர் என்றும் பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. உறுப்பினர் விஜயகுமார்:- பாதாள சாக்கடை மேன் ஹோல் சரி செய்யப்படாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. கோகுல் பகுதிகளில் குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் துரை ஆனந்த்:- நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 60,000-க்கும் மேல் உள்ளது. ஆண்டு வருவாய் ரூ.1 கோடியே 10 லட்சமாக உள்ளது. நகர் விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மாவட்ட தலைமை இடமாக உள்ள சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கை ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

11-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் என்.எம்.ராஜா மற்றும் 15-வது வார்டு அ.ம.மு.க. உறுப்பினர் அன்புமணி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் ஜெயா ஜெனிபர், 9-வது வார்டு உறுப்பினர் சண்முகத்தாய், 25-வது வார்டு உறுப்பினர் ராதா மற்றும் அ.ம.மு.க.வை சேர்ந்த 13-வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கருப்பு பேட்ச் அணிந்து கூட்டத்திற்கு வந்தனர். கூட்டம் தொடங்கியதும் அவர்கள் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்திடம் நகராட்சி வருவாய் இழப்பு தீர்மானங்களை கண்டித்தும், நகராட்சியின் மக்கள் விரோத செயலை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

பின்னர் உறுப்பினர் என்.எம்.ராஜா கூறியதாவது:- நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கொட்டுவதற்கு இடம் கிடையாது. நகரின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாமல் உள்ளது. மக்கள் பிரச்சினைகள் மற்றும் குறைகளை கூட்டத்தில் சொல்ல முடியாமல் கடந்த 3 மாதமாக கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்