சென்னையில் மாநகர பஸ்கள் வழக்கம் போல் மீண்டும் இயக்கம்: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவு
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவு வந்துள்ளதால் பணிமனைகளில் இருந்து மீண்டும் வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பஸ்களை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டை ,கே கே நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆவடி, பூவிருந்தவல்லி, ஐயப்பந்தாங்கல் பணிமனை என பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மேலும், அரசு பஸ்கள் குறைந்து எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் இது மாலை நேரம் என்பதால் பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அளித்த அறிவுறுத்தல் படி உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்குகிறோம் என்றும் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வர ஒத்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
இதனையடுத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்க தொடங்கினர்.
சென்னையில் மாநகர அரசு பஸ்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத்தொடங்கின. இதனால் பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இதனிடையே சென்னை மாநகர பஸ்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் திடீர் போராட்டம் காரணமாக
ஆட்டோக்களில் வழக்கத்தைவிட ரூ.75 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்ட்ரல் - பல்லாவரம் டாக்ஸி கட்டணம் ரூ.550 வரை உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.