போலீசாருடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்
சாராய ஒழிப்பில் பொதுமக்கள், போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.
குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 19 மனுதாரர்களை நேரில் அழைத்து குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு, போலீஸ் சூப்பிரண்டு அறிவுரைகள் வழங்கினார். மேலும் புதிதாக 15 புகார் மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-
இணைந்து செயல்பட வேண்டும்
மாவட்டத்தில் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 பேர் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 229 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள், மதுபாட்டில் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாராயம் அற்ற மாவட்டமாக மாற்றுவதில் பொதுமக்களுக்கு பெரும் பங்கு உள்ளது. இதனை உணர்ந்து சாரய ஒழிப்பில் போலீசாருடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.