மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளுடன் குவிந்த பொதுமக்கள்
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளுடன் குவிந்த மக்களிடம் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மனுக்கள் வாங்கினார்.
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளுடன் குவிந்த மக்களிடம் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மனுக்கள் வாங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், அந்த மனுக்களை உரிய அதிகாரிகளிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முறைகேடு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் சிலர் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், ஈரோடு மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தனி தாசில்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதுபோல் முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்த பெண்களுக்கான உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் நேற்று மனுக்கள் கொடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர். மொத்தம் 168 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாராட்டு
கூட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியை முழுமையாக முடித்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட ஆனந்தம்பாளையம், பவானி தொகுதிக்கு உள்பட்ட அம்மாபேட்டை, அந்தியூர் தொகுதிக்கு உள்பட்ட பிரம்மதேசம், கோபி தொகுதிக்கு உள்பட்ட நம்பியூர், கோபி வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் பாராட்டப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா சான்றிதழ் மற்றும் தலா 5 கிராம் வெள்ளிக்காசு பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகிஜான், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.