குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-23 17:10 GMT

சாலை மறியல்

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் குருமூர்த்தி அய்யர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சைதாப்பேட்டை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் அவதிக்கு உள்ளான பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி சமையல் மற்றும் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

டிராக்டர், லாரி மூலம் குடிநீர் வழங்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்ததாகவும், ஆனாலும் நேற்று காலை வரை குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் விரக்தி அடைந்த குருமூர்த்தி அய்யர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் காலிகுடங்களுடன் பி.டி.சி.ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் சமரசம்

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதி கவுன்சிலர், வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் வழங்கும்வரை சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட பழுது காரணமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. லாரி மூலம் உடனடியாக குடிநீர் வழங்குவதாகவும், ஓரிரு நாளில் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்