அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
நஞ்சுகொண்டாபுரத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமிர்தி பூங்கா
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வேலூரில் இருந்து பென்னாத்தூர், நாகநதி மற்றும் நஞ்சுகொண்டாபுரம் வழியாக செல்லும் சாலையையே அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
இதில் நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. நாகநதியில் இருந்து மேதலபாடி, வேடகொல்லைமேடு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அமிர்தி சாலையை சீரமைக்கக் கோரி அந்தப்பகுதி மக்கள் பலமுறை வனத்துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அமிர்தியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராம்ராஜ், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கன்னியப்பன் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி கீழே ஊற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, வருவாய் ஆய்வாளர் சந்தியா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு உள்ளிட்டோர் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.