அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-01 22:58 GMT

அம்பத்தூர்,

அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம், மூகாம்பிகை நகர், மாதனாங்குப்பம், புதூர், ஒரகடம், கோயம்பேடு சாலை, மண்ணூர்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவும் மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மின்சாரம் வருவதும், பின்னர் போவதுமாக கண்ணாமூச்சி காட்டியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

சாலை மறியல்

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் மின்வாரிய அலுவலக அதிகாரிகளும், ஊழியர்களும் போனை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கள்ளிகுப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த அதிகாரிகளும், பொதுமக்களின் கேள்விக்கு முறையான பதில் கூறவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அம்பத்தூர்-செங்குன்றம் சாலையின் இருபுறமும் மறியலில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களையும் நிறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையிலான போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீரான முறையில் மின்சார வினியோகம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியதால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்