பாதை வசதி கேட்டு போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் பாதை வசதி கேட்டு போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-24 12:35 GMT

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் அளித்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் அலுவலர் ராமமூர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கழிவுநீர் கால்வாய்

கூட்டத்தில் காட்பாடி தாலுகா காங்கேயநல்லூர் அருணகிரிநாதர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தரவேண்டும் என கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள மனுவில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும், வாய் பேசாதோர், காது கேளாதோருக்கு அரசு பணிகளில் ஒரு சதவீத இடஒதுக்கிடு வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

சலவன்பேட்டை அருகே உள்ள அம்மணாங்குட்டை சாமியார் மடத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லை. அவர்களை பள்ளியில் சேர்க்கவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் அவர்களுக்கு பழங்குடியினர் மலைகுறவன் (எஸ்.டி.) சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

பாதை வசதி வேண்டும்

பொய்கை ஊராட்சி மன்ற உறுப்பினர் அக்னி வேல்முருகன் அளித்துள்ள மனுவில், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் யு.டி.ஆர். திருத்தம், பட்டா பரப்பு பிழை திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

சத்துவாச்சாரி பேஸ்-1 இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் கோவிலுக்கு சென்று வரும் வழியில் தனி நபர் சுற்றுச்சுவர் கட்டி வருகிறார். இதனால் எங்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. எங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என மனு அளித்தனர். மேலும் இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் வெங்கடாச்சலம் தலைமையில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் அளித்துள்ள மனுவில், நாங்கள் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளோம். எங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அரசு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான அமர்வு வாலிபால் போட்டியில் வென்ற பரிசு கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்