உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஈரோட்டில் தொடங்கியது

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஈரோட்டில் நேற்று தொடங்கியது.

Update: 2022-06-03 20:58 GMT

ஈரோடு

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஈரோட்டில் நேற்று தொடங்கியது.

சர்க்கஸ் நிகழ்ச்சி தொடக்கம்

தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த 30 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர், எத்தியோப்பியா, சூடன், எகிப்து, லெபானான், சிரியா, இலங்கை உள்பட 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சர்க்கஸ் ஈரோடு மரப்பாலம் பேபி ஆஸ்பத்திரி அருகில் உள்ள மகாஜனா பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மண்டல தலைவர்கள் குறிஞ்சி என்.தண்டபாணி, சசிகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் ரமணி, சபுராமா ஜாபர்சாதிக், தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் மேலாளர்கள் கே.வில்சன், ஏ.எம்.எஸ்.நாசர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கியது. ரஷ்யா, சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வல்லுனர்களால் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர். குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோபெட், 60 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், பல வளையங்களை கால்களால் விளையாடும் ரஷ்யன் புட் ஜங்கினின், பெண்கள் கயிற்றை கொண்டு சாகசம் புரியும் ரஷ்யன் லேசோ ஆகிய சாகச நிகழ்ச்சிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

துப்பாக்கி சூட்டிங்

உலக புகழ் பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல் முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் சுடும் துப்பாக்கி சூட்டிங் நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது. உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் அழகி தலைகீழாக நடக்கும் ஸ்கைவாக், பிடிமானம் எதுவுமில்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்சிங் டிரிபிஸ், குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அழகி செய்யும் சாகச நிகழ்ச்சியும் அரங்கேறியது.

பிரேக் இல்லாத சைக்கிளில் முன் சக்கரம் தரையில் படாமல் தூக்கி கொண்டு ஓட்டுதல், ஹேண்ட்பாரில் அமர்ந்து பின்நோக்கி சைக்கிளை ஓட்டி அழகிகள் அசத்தினர். கால்களால் முன்னும், பின்னும் வேகமாக நடந்த நாய்கள், ஒட்டகத்தின் அணிவகுப்பு போன்றவற்றை சிறுவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கிறது. சர்க்கஸ் நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதற்கு டிக்கெட் கட்டணமாக ரூ.200, ரூ.150, ரூ.100 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்