சிலம்பு எக்ஸ்பிரஸ் நரிக்குடி, திருச்சுழி நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை
சிலம்பு எக்ஸ்பிரஸ் நரிக்குடி, திருச்சுழி நிலையங்களில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
சிலம்பு எக்ஸ்பிரஸ் நரிக்குடி, திருச்சுழி நிலையங்களில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
தவறான தகவல்
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து தவறான தகவல் பரப்புவதாக மத்திய சுகாதார மந்திரி மன்சூக் மாண்டவியா தெரிவித்தார். ஆனால் அவர்தான் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மதுரையில் செயல்படுவதாக தவறான தகவலை தெரிவித்தார்.
மேலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மதிப்பீடு ரூ. 1,900 கோடியாகி விட்டதால் தான் தாமதம் என குறிப்பிட்டார். இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆட்சி கலைப்பு
மேலும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேட்ட நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் மோடி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆட்சிகலைப்பு போன்ற விவரங்களை பேசி குழப்பினார். அ.தி.மு.க.வை நான்கு துண்டுகளாக பிரித்து சாதனை படைத்துள்ளது பா.ஜ.க. எனவே பா.ஜ.க.வை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்திற்கு வராமல் இலங்கைக்கு பயணமாகியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி. அது தி.மு.க.வின் நல்லாட்சிக்கான சான்றாக அமையும்.
குடிநீர் பிரச்சினை
சிலம்பு எக்ஸ்பிரஸ் நரிக்குடி, திருச்சுழி நிலையங்களில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை -தூத்துக்குடி அகல ெரயில் பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். விருதுநகரில் புதிய பஸ் நிலையம் செயல்படவும் நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர் மீசலூரில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கினை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் திருப்பதி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ண மூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் சீனிவாசன், சிவகுருநாதன், பாலமுருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.