தேவாலயத்தை அகற்றக்கோரி வழக்கு: அரியலூர் கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தேவாலயத்தை அகற்றக்கோரி வழக்கு: அரியலூர் கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம் சாலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'எங்கள் கிராமத்தில் சமீபகாலமாக சிலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி வருகின்றனர். அவர்கள் எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீசர்வேஸ்வரன் மற்றும் அய்யனார் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சின்னப்பர் தேவாலயத்தை கட்டியுள்ளனர். அருகே கல்லறைத் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கைமனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர், அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.