தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2022-12-25 15:11 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண மின்விளக்குளால் அலங்கப்பட்டிருந்தது. மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தெரிவிக்கும் வகையில் தேவாலயங்களின் முன்பு குடில்கள் அமைத்து, பல வண்ணங்களில் ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். மேலும் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து மின்விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். கேக் வாங்கி உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். புத்தாடைகள் அணிந்தும் குழந்தைகள் மகிழ்ந்தனர்.

சிறப்பு பிரார்த்தனை

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை, பிரார்த்தனை, திருப்பலி ஆராதனை நடந்தது. வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் அதிகாலை 4 மணிஅளவில் பிஷப் சர்மா நித்தியானந்தம், தலைமை ஆயர் எஸ்.சைமன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிறப்பு பிரசங்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில் துணை ஆயர்கள் ஜே.பாண்டியன், ஒய்.ஜசக்மகிமைதாஸ், கோவில் செயலர் டி.பால்ராஜ், பொருளாளர் சி.ஜோஸ்வா மற்றும் நிர்வாகிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்தின் சார்பில் உதவி தலைவர் பி.சுரேஷ்ஆனந்தகுமார், செயலாளர் ஜேரட்அருள்ஜெயரூபன், பொருளாளர் டி.சுந்தர்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நற்கருணை வழிபாடு

காலை 9 மணி அளவில் பரிசுத்த நற்கருணை வழிபாடு நடந்தது. மழை பெய்தபோதிலும் கிறிஸ்தவர்கள் பலர் குடைபிடித்தபடி தேவாலயத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதேபோல வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சீயோன் பெந்தேகொஸ்தே சபையிலும் பாஸ்டர் இம்மானுவேல் பால் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

அதேபோன்று பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களில் பலர் முககவசம் அணிந்திருந்தனர். கிருமிநாசினி உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பல தேவாலயங்களில் கேக், தேநீர் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்