சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

வைகாசி திருவிழாவையொட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-06-06 20:55 GMT

சோழவந்தான்,

வைகாசி திருவிழாவையொட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

ஜெனகை மாரியம்மன் கோவில்

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த மே மாதம் 22-ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து தினமும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். 16-வது திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை அம்மன் கேடய வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேருக்கு வந்து சேர்ந்தது.

தேரோட்டம்

தேரில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகளை செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், தாசில்தார் மூர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூராட்சி செயல் அலுவலர் சகாயஅந்தோணியூசின், கோவில் செயல்அலுவலர் இளமதி, மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மாதவன் மற்றும் பக்தர்கள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக நிலைக்கு வந்து சேர்ந்தது.. இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், முத்தையா, முத்து உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்