சொக்கநாத சுவாமி கோவில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம்
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம்
விருதுநகர் ஸ்ரீ சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ பெருந்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த ஒரு வார காலமாக சுவாமி, மீனாட்சியம்மனுடன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளபாலித்தார். நேற்று முன்தினம் சொக்கநாத சுவாமி, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று 9-ம் திருநாளையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் சொக்கநாத சுவாமி, மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9 மணி அளவில் தேரோட்டத்தை நகரசபை தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
அதனைத்தொடர்ந்து பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலரதவிதி திருப்பத்தில் எந்திரங்கள் உதவியுடன் தேரோட்டம் தொடர்ந்தது. மதியம் 1 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.
ஏற்கனவே முன்னேற்பாடுகள் நடந்திருந்த நிலையில் அனைத்து வீதிகளிலும் திருத்தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேர் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் வளர்மதி, கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமணன், முன்னாள் தக்கார் ரத்தினகுமார், பிரம்மோற்சவ கட்டளை நிர்வாக அறங்காவலர் ராம்தாஸ், நகர அ.தி.மு.க. செயலாளர் முகம்மது நயினார், முன்னாள் ஆவின் தலைவர் முகமதுஎகியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.