தஞ்சையில் சின்னவெங்காயம் விலை மீண்டும் உயர்வு
தஞ்சையில் சின்னவெங்காயம் விலை மீண்டும் உயர்வு
தஞ்சையில் சின்னவெங்காயம் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கிலோ ரூ.120-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காய்கறி மார்க்கெட்
தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் உள்ளது. இதே போல் அரண்மனை வளாகத்திலும் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டில் சில கடைகள் இயங்கி வருகின்றன. தஞ்சை மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
வெங்காயம் விலை கடும் உயர்வு
ஏற்கனவே சின்ன வெங்காயம் விலையை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வந்தது. தஞ்சை மார்க்கெட்டிற்கு 100 டன் வரை பெரிய வெங்காயம் விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன் பின்னர் வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்து விலையும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது ரூ.110 முதல் ரூ.120 வரை கிலோ விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டதால் விற்பனையும் குறைந்து காணப்பட்டது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைவாக உள்ளது. தஞ்சைக்கு அரியலூர், பெரம்பலூர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து தற்போது குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.
பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டாலும் அதன் விலை கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.