பிடாரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

விருத்தாசலம் அருகே பிடாரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 8-ம் நாள் விழாவில் பெண் பக்தர்கள் தங்களது தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

Update: 2023-04-18 18:45 GMT

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த பிடாரியம்மனுக்கு அருகில் உள்ள காணாதுகண்டான் கிராமம் தாய் வீடு எனவும், தே.கோபுராபுரம் கிராமத்தில் எழுந்தருளி சின்ன பண்டாரங்குப்பத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால் ஆண்டுதோறும் தே.கோபுராபுரம் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறும் போது, 8-ம் நாள் விழாவில் தனது தாய் வீடான காணாதுகண்டான் கிராமத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது அப்பகுதி மக்கள், திருமண சீராக சீர் பொருட்களை வழங்குவார்கள்.

மேலும் குழந்தை வரம், சுகப்பிரசவம் மற்றும் குழந்தைகள் நோயின்றி வாழ வேண்டி பெண்கள் தங்களது தாலியை கழட்டி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அவ்வாறு தாலியை காணிக்கையாக செலுத்தும் பெண்பக்தர்கள், அதன் பிறகு மாங்கல்யம் அணியாமல் வெறும் மஞ்சள் கயிறை மட்டும் கழுத்தில் அணிவார்கள்.

அபிஷேக ஆராதனை

அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 8-ம் நாள் விழா நேற்று காணாது கண்டான் கிராமத்தில் நடந்தது. முன்னதாக தே.கோபுராபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க்ப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக காணாது கண்டான் கிராமத்துக்கு வந்தார்.

அம்மனுக்கு தாலி காணிக்கை

அப்போது அம்மனுக்கு மேள, தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் வீதிஉலா நடைபெற்றது. அப்போது பெண் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தங்களது தாலியை பூஜை பொருட்களுடன் பிடாரி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

மேலும் ஆடு, கோழிகளும் பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பலர் அம்மனுக்கு திருமண சீர் வரிசை பொருட்களை வழங்கினர். இரவில் சின்ன பண்டாரங்குப்பம் கிராமத்தில் பிடாரி அம்மன் எழுந்தருள அங்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து காணாது கண்டான் பகுதியை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கூறுகையில், திருமணத்தின் போது எல்லோருக்கும் கட்டுவது போல எங்களுக்கும் தாலி கயிறுடன் மாங்கல்யத்தை சேர்த்து தான் கட்டுவார்கள். பின்னர் குழந்தை வரம் வேண்டி, அந்த தாலியை மாங்கல்யத்துடன் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி விடுவோம். அதன்பிறகு நாங்கள் ஆயுள் உள்ளவரை தாலி அணிய மாட்டோம். வெறும் மஞ்சள் கயிறு மட்டும் அணிந்திருப்போம் என்றார். தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டி, பெண் பக்தர்கள் அம்மனுக்கு தாலியை காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்