சித்ரா பவுர்ணமி திருவிழா முன்னேற்பாடு பணிகள் கூட்டம்

மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2023-04-05 19:00 GMT

கண்ணகி கோவில்

தேனி மாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி மலைஉச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி நடக்கிறது.

இந்த திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். தமிழக, கேரள மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திருவிழாவில் பங்கேற்க வருவார்கள் என்பதால் குமுளியில் இருந்து கோவிலுக்கு ஜீப்கள் மூலம் போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் அமைத்தல், கழிப்பிட வசதி போன்ற பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, 'கோவிலுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதையும் கொண்டு செல்லக்கூடாது. 5 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வன விலங்குகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இருமாநில வனத்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்