சின்னமனூரில்டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்:கலெக்டரிடம், கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்

சின்னமனூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினர்.

Update: 2023-01-19 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பாலபாரதி தலைமையில், தேனி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், "சின்னமனூர் எள்ளுக்கட்டை தெருவில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த சாலையின் வழியாக கடைகள், சிவகாமி அம்மன் கோவில், விவசாய நிலங்களுக்கு பலர் சென்று வருகின்றனர். பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கடந்த டிசம்பர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 3 மாதத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர். 3 மாதங்கள் கடந்தும் இடமாற்றம் செய்யாததால் நேற்று முன்தினம் மீண்டும் போராட்டம் நடத்தச் சென்றபோது போலீசார் வழிமறித்து கைது செய்தனர். எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு, பெண்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளை அச்சுறுத்தும் வகையில் பேசிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்