சீன காய்கறி கொள்முதல் விலை உயர்வு

ஊட்டியில் சீன காய்கறி கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.550-க்கு விற்பனை ஆவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-12-26 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் சீன காய்கறி கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.550-க்கு விற்பனை ஆவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கிளைகோஸ்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரட், பீட்ரூட், பூண்டு, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதேபோல் சைனீஸ் ரக காய்கறிகளை சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சைனீஸ் (சீன) காய்கறிகளான சுகுணி, ரெட் கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, செல்லரி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன், கிளைகோஸ் போன்றவை விளைவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஊட்டி கோடப்பமந்து, தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல்தொரை, ஒரநள்ளி, கேத்தி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடைக்கு பின்னர் சைனீஸ் காய்கறிகள் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கிலோ ரூ.550-க்கு விற்பனை

நீலகிாியில் விளைவிக்கப்படும் சைனீஸ் காய்கறிகள் தினமும் காலையில் ஊட்டி மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் புத்தாண்டையொட்டி தற்போது சைனீஸ் காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளது. சைவ பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய சூப், குழம்பு உள்ளிட்ட பல்வேறு உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஸ்ப்ரவுட் எனப்படும் கிளைகோஸ் விலை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.

ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ கிளைகோஸ் ரூ.550-க்கு விற்பனையானது. மற்ற நாட்களில் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்தது. இதேபோல் சுகுணி கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆகவும், புரூக்கோலி ரூ.100-ல் இருந்து ரூ.220 ஆகவும், லீக்ஸ் ரூ.40-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை உயர்ந்து உள்ளது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தேவை அதிகரிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி சைனீஸ் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும், நீலகிரியில் முதன்முறையாக கிளைகோஸ் கிலோ ரூ.500 தாண்டி உள்ளது என்றனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஷிப்லா மேரி கூறுகையில், கிளைகோஸ் காய்கறியை பொறுத்தவரை குறைந்த பரப்பளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 20 ஹெக்டர் வரை கிளைகோஸ் பயிரிடப்பட்டு உள்ளது. இதனால் உற்பத்தி குறைந்ததால் தேவை ஏற்பட்டு விலை அதிகரித்து உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்