'பைக் டாக்சி'யில் சென்ற கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் -வாலிபர் கைது
சென்னையில் ‘பைக் டாக்சி'யில் பயணித்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னையில் 'பைக் டாக்சி' சேவை அமலில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் செல்போன் செயலியில் பதிவு செய்து பகுதி நேரமாக பலர் இந்த வேலையை செய்து வருகிறார்கள். ஆண்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டினாலும் பெண்கள் தயக்கமின்றி பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள தனது சகோதரரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 'பைக் டாக்சி'யில் முன்பதிவு செய்து பயணம் செய்தார்.
மோட்டார் சைக்கிளை முகப்பேர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (24) என்ற வாலிபர் ஓட்டினார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கல்லூரி மாணவிக்கு ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் ரமேஷ் மீது ஆதாரபூர்வமாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். எனவே அவருடைய அத்துமீறலை செல்போனில் ரகசியமாக வீடியோ பதிவு செய்தார்.
கைது
இந்த நிலையில் ராயப்பேட்டை வந்தவுடன் தனது சகோதரரிடம் இந்த தகவலை தெரிவித்தார். உடனடியாக அவர், ரமேசை பிடித்து வைத்துக்கொண்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
ரமேசை கைது செய்து அழைத்து சென்றார். அவருடைய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ரமேஷின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் என்பதும், இவர், முகப்பேர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பகலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வேலை முடிந்தவுடன் 'பைக் டாக்சி' ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.