ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்

திண்டுக்கல் அருகே, ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளிக்கு தர்ம அடி விழுந்தது.

Update: 2023-04-17 19:00 GMT

கணவருடன் பஸ்சில் பயணம்

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் காந்திகிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர், தனது கணவருடன் பயணம் செய்தார்.

திண்டுக்கல்லில் அந்த கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனை செய்து விட்டு, 2 பேரும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். பஸ்சில் கூட்டம் அதிமாக இருந்தது. கர்ப்பிணி, மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்தார்.

கர்ப்பிணியிடம் சில்மிஷம்

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், திண்டுக்கல்லை அடுத்த தோமையார்புரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்ப்பிணியின் அருகே நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவரை உரசியபடி சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக தனது கணவரிடம் கர்ப்பிணி கூறினார். இதனையடுத்து மனைவி அருகே வந்த கணவர், அந்த நபரிடம் சற்று தள்ளி நிற்குமாறு கூறினார். இதற்கு செவிசாய்க்காத அவர், கணவர் கண் எதிரே மீண்டும் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

சரமாரி அடிஉதை

இதற்கிடையே காந்திகிராமம் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்தது. இதனால் பஸ்சில் இருந்து கர்ப்பிணியும், அவரது கணவரும் தங்களது ஊருக்கு செல்வதற்காக கீழே இறங்கினர். இதேபோல் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரையும், கண்டக்டர் அங்கு இறக்கி விட்டார்.

இதனையடுத்து அந்த நபரை, கர்ப்பிணியின் கணவர் தாக்கினார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர். அப்போது அவர்களிடம், ஓடும் பஸ்சில் நடந்த சம்பவம் குறித்து அந்த தம்பதி கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களும், அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள வடகாட்டுப்பட்டியை சேர்ந்த பில்லான் (வயது 43) என்று தெரியவந்தது.

திண்டுக்கல்லில் சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை செய்வதாகவும், தனது ஊருக்கு செல்லும் என்று நினைத்து மதுரை பஸ்சில் ஏறியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே காயம் அடைந்த பில்லான், 108 ஆம்புலன்சு மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் கர்ப்பிணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்