சேலத்தில் பரபரப்பு: சில்லி சிக்கன் கடை ஊழியருக்கு கத்திக்குத்து-வாலிபருக்கு வலைவீச்சு

சேலத்தில் சில்லி சிக்கன் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-09 18:45 GMT

சில்லி சிக்கன் கடை

சேலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்புதல்வன் (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள சில்லி சிக்கன் கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த கடைக்கு கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த முரளிதரன் (27) என்பவர் வந்தார்.

பின்னர் அவர் பணம் கொடுக்காமல் ஓசியில் சில்லி சிக்கன் கேட்டுள்ளார். இதற்கு சதீஷ்புதல்வன் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து முரளிதரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நள்ளிரவு அவர் மீண்டும் அந்த சில்லி சிக்கன் கடைக்கு வந்தார். அப்போது சதீஷ்புதல்வன் கடையை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.

கத்திக்குத்து

இதையடுத்து திடீரென அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முரளிதரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்புதல்வனை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட 9 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதனிடையே முரளிதரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சதீஷ்புதல்வனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளிதரனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்