ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் டீன் ஜெயந்தி தலைமையில் நடந்தது
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. உலக நிமோனியா வார விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஆர்.ஜெயந்தி தலைமை தாங்கி, கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் குழந்தை நிமோனியா மேலாண்மை குறித்து நடத்தப்பட்ட தொடர் மருத்துவக்கல்வி திட்டத்தில், நுரையீரல் நிபுணர் டாக்டர் சோமு சிவபாலன் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை டீன் டாக்டர் விஜய் சதீஷ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஆதிலட்சுமி, கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், குழந்தைகள் நல பேராசிரியர் டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் சிவக்குமார் மற்றும் முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.