திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

Update: 2022-05-28 12:38 GMT

திருவள்ளூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக 1098 என்ற எண்ணை அழைத்தால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாயிலாக தொடர்பு கொள்வார்கள். ஏதேனும் குறைகள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம். அப்படி இருந்தும் அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த உதவி எண்ணை குறிப்பிட்ட வயது உள்ள குழந்தைகள், மாணவர்கள், மாணவிகளுக்கு தான் இது பயனுள்ளதாக அமையும். போக்சோ சட்டம் என்றால் என்ன இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன.

இந்த சட்டத்தில் எப்படி புகார் தெரிவிக்க வேண்டும். இந்த சட்டத்தில் புகார் வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் போலீசார் எடுக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த போக்சோ சட்டத்தின் அடிப்படையில் பாதகமாக ஒரு செயல் நடப்பது தெரியவந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சந்தேகங்கள் நம் அனைவருக்கும் இருக்கும். எனவே இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு தான் சுப்ரீம் கோர்ட்டுகளில் பணியாற்றும் மூத்த வக்கீல்களை கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கின்ற இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழிப்புணர்வு பயிற்சிக்கு வருகை தந்துள்ள அனைவரும் போக்சோ சட்டம் குறித்து தங்களுக்கு உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து எந்த வகையில் சட்டத்தை கையாள வேண்டும். என்பதை முழுமையாக அறிந்து அதன்படி குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி, சுப்ரீம்போர்ட்டு மூத்த வக்கீல் பிபு தத்தா தாஸ், குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸிலியா, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சுகாதாரத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்