குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்
குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார். கவுன்சிலர்கள் கருணாகரன், அண்ணாதுரை, சுபாஷினிலோகநாதன், அண்ணாமலை, சுரேஷ், மாலதிராஜி, லட்சுமிஏகாம்பரம், தமிழரசி இளையமுருகன், தமிழ்வாணி, ரேகாரமேஷ் சந்திரகுமார், ஈஸ்வரிகுமார், வள்ளி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் மரபு கழிவுகளாக மாறியுள்ளது. இந்த கழிவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் தான் அகற்ற முடியும். இந்த பணிகளை மேற்கொள்ள அரசிடம் அனுமதி கேட்டு அறிக்கை அனுப்புதல், பென்னாத்தூர் பேரூராட்சியில் வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டும், கேசவபுரத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய குழாய் வசதி அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி பணியாளர் திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.