குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி மண்டல அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000, ஜோசப் கண் மருத்துவமனை, ஜி.வி.என். ரிவர் சைடு மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி இயக்கம் இணைந்து குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். கலெக்டர் அலுவலக குழந்தைகள் பூங்காவில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, ரோட்டரி மாவட்டம் 3000 மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக என். எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடல், மனம், பாலியல் சீண்டல்கள் மற்றும் ஒதுக்கி வைத்தல் ஆகிய நான்கு துன்புறுத்தல்களும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு துன்புறுத்துவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் முடிவடைந்தது. இதில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு, ஜி.வி.என் ரிவர் சைடு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில் குமார், ரோட்டரி சிறப்பு திட்டங்களின் செயலாளர் முரளி, நிர்வாக செயலர் செந்தில்குமார், திட்ட தலைவர் ராணி ரோஸ்லின், திருச்சி மண்டல ரோட்டரியன்கள், பாரதிதாசன் பல்கலைகழக நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கேசவன், எட்வின், ஜானகி ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.